This is a translation of an original page in English.

அறிவுசார் சொத்து எனும் அபத்தம்!

ஆசிரியர்: ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன்

தனித்த மாறுபட்ட, முற்றிலும் வெவ்வேறு பொருட்களையும், சட்டங்களையும் பிரதிபலிக்கின்ற பதிப்புரிமை, படைப்புரிமை, வர்த்தகமுத்திரை ஆகிய மூன்று விஷயங்களையும் ஒரே குட்டையில் போட்டு "அறிவுசார் சொத்து" என்று குழப்புவது வாடிக்கையாகிவிட்டது. இது ஏதோ விபத்தில் விளைந்த விபரீதம் அல்ல. இதனால் இலாபமடையும் நிறுவனங்கள் வளர்த்துவிட்ட குழப்பம். இந்த குழப்பத்தினை தவிர்க்க இப்பதத்தை முற்றிலும் புறக்கணிப்பதே தெளிவான வழி.

"அறிவுசார் சொத்து" என்கிற இப்பதமானது 1967 ல் "உலக அறிவுசார் சொத்து நிறுவனம்" நிறுவப்பட்ட பின்னர், பின்பற்றப்படத் துவங்கி சமீபத்தில் தான் மிகவும் பிரபலமானது என்கிறார் ஸ்டான்போஃர்டு சட்டப் பள்ளியில் தற்பொழுது பேராசிரியராக இருக்கும் மார்க் லேமேய். "உலக அறிவுசார் சொத்து நிறுவனம்" முன்னர் ஐநா சபையின் அங்கமாய் இருந்தது. ஆனால் உண்மையில் பதிப்புரிமை, படைப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை உடையோர்களுடைய விருப்பங்களைத் தான் அது பிரதிபலித்தது.

இப்பதத்திலுள்ள பாரபட்சத்தினை கண்டறிவது மிகச் சுலபம். இது பௌதீக பொருட்களின் மீதுள்ள சொத்துரிமையைப் போல பதிப்புரிமை, படைப்புரிமை, வர்த்தகமுத்திரை ஆகியவற்றைக் கருதச் சொல்கிறது. (அறிஞர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய பதிப்புரிமை, படைப்புரிமை, வர்த்தகமுத்திரைகளுக்கான சட்ட விளக்கங்களோடு இந்த ஒப்பீடானது முரண்படுகிறது.) உண்மையில் இச்சட்டங்கள் பௌதீக சொத்துரிமைச் சட்டங்களைப் போலில்லை என்றபோதும் இப்பதத்தினை அவ்வர்த்தத்திலேயே பிரயயோகப்படுத்துகின்ற காரணத்தினால் சட்டமன்றத்தினர் இதனை அங்ஙனமே மாற்ற முனைகின்றனர். பதிப்புரிமை, படைப்புரிமை மற்றும் வர்த்தகமுத்திரைகளைப் கடைபிடிக்கின்ற நிறுவனங்கள் இம்மாற்றத்தினையே விரும்புகிறார்கள் என்பதால் "அறிவுசார் சொத்து" என்பதின் பாரபட்சம் நன்கு புலப்படும்.

இந்த பாரபட்சம் ஒன்றே இப்பதத்தினை முற்றிலும் புறக்கணிக்க போதுமான காரணமாகும். மேலும் இவையனைத்தையும் உள்ளடக்கிய புதிய பெயரொன்றையும் பரிந்துரைக்குமாறு மக்களில் பலர் எம்மிடம் கேட்டுள்ளதோடு, அவர்களே முன்வந்து (வேடிக்கையான) பல பரிந்துரைகளையும் செய்துள்ளனர். அவைகளுள் திணிக்கப்பட்ட ஏதேச்சாதிகார உரிமைகள் மற்றும் அரசிடமிருந்து தோற்றுவிக்கப் பட்டு சட்டபூர்வமாக செயற்படுத்தப்பட்ட ஏதேச்சாதிகாரங்கள் முதலியவையும் அடங்கும். பிரத்யேக உரிமையுள்ள அதிகாரங்கள் என்று கூட சிலர் கூறியதுண்டு. ஆனால் தளைகளை உரிமைகளாக மொழிவது என்பது இரட்டிப்பு வேலைதான்.

இம்மாற்றுப் பரிந்துரைகளுள் சில பொருத்தமாகக் கூடத் தோன்றலாம்.ஆனால் "அறிவுசார் சொத்து" என்பதற்கு மாற்றுச் சொல்லினைத் தேடுவது தவறு. அதிகம் பரவலாக்கப்பட்டிருக்கும் இப்பதத்தின் ஆழமான பிரச்சனையை மாற்றுப் பெயர்களால் நிரப்ப இயலாது. "அறிவுசார் சொத்து" என்ற ஒன்று இல்லவே இல்லை. அது ஒரு கானல் நீர். அதிகம் பிரபலப்படுத்தப் பட்டிருக்கும் காரணத்தினாலேயே மக்கள் மத்தியில் தனித்துவம் வாய்ந்த துறையாக அது காட்சியளிக்கிறது.

அடிப்படையில் மாறுபட்ட இச்சட்டங்களை ஒன்றாய் வழங்குவதற்கு கிடைத்த அருஞ்சொல்லே "அறிவுசார் சொத்து" என்பதாகும். வழக்குரைஞர் அல்லாத ஏனையோர் இப்பதம் இச்சட்டங்களுக்காக பயன்படுத்தப்படுவதை அறியும் போது இவையனைத்தும் ஒரே கொள்கையாலும் ஒத்த செயல்திட்டத்தாலும் உந்தப்பட்டதாக பாவித்துக் கொள்கிறார்கள்.

இதைத் தாண்டி இதில் சொல்வதற்கொன்றுமில்லை. தனித்தனியே தோன்றியதாகவும், பலவகைகளில் பரிணாமம் பெற்று மாறுபட்ட செயல்களை உள்ளடக்கியதாகவும் , வெவ்வேறான பொதுக் கொள்கைகளை எழுப்பியவையாகவும் இச்சட்டங்கள் அமைகின்றன.

பதிப்புரிமை சட்டமானது கலை மற்றும் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. ஒரு பணி வெளிப்படுத்தப்படும் விவரங்களை உள்ளடக்கியது. படைப்புரிமைச் சட்டமோ பயனுள்ள சிந்தனைகளை வெளிக்கொணர வேண்டி அதனை வெளிப்படுத்துபவருக்கு சில காலத்திற்கு அச்சிந்தனை மீது முழு அதிகாரம் கொடுக்க முனைகிறது. இந்த விலை சில துறைகளில் கொடுக்க வல்லது மற்ற சில துறைகளில் அவசியமற்றது.

மாறாக வர்த்தக முத்திரைச் சட்டமோ தனித்தன்மை வாய்ந்த எந்தவொரு வெளிப்பாட்டினையும் ஊக்குவிப்பதற்காக ஏற்படுத்தப் படவில்லை. மாறாக நுகர்வோருக்கு தாங்கள் எதை வாங்குகிறோம் என்பதை அறியத் துணை புரிகிறது. "அறிவுசார் சொத்து" என்கிற மாயையின் காரணமாக சட்டமன்றத்தினர் விளம்பரத்திற்கு ஊக்கதொகை வழங்கும் ஒரு திட்டமாக இதனை மாற்றி விட்டனர்.

இச்சட்டங்கள் மூன்றும் தனித்தனியே இயற்றப் பட்டதால், ஒவ்வொரு அம்சத்திலும் அவை மாறுபட்டு விளங்குகின்றன. மேலும் இவற்றின் அடிப்படை முறைகளும் நோக்கங்களுமே மாறுபட்டு நிற்கிறது. ஆக பதிப்புரிமை பற்றி தங்களுக்கு தெரிந்திருந்தால் படைப்புரிமை வேறுபட்டது என்பதை சுயமாகவே ஊகித்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் தாங்கள் தவறிழைப்பது மிகவும் கடினம்.

ஏதோ ஒரு உயர்ந்த அல்லது தாழ்ந்த வகையைச் சுட்டும் பொருட்டு "அறிவுசார் சொத்து" என மக்கள் அடிக்கடி சொல்கிறார்கள். உதாரணத்திற்கு பணக்கார நாடுகள் ஏழை நாடுகளிடமிருந்து பணம் பிடுங்க வேண்டி அநியாயமான சட்டங்களை சுமத்துகிறார்கள். அவற்றுள் சில தான் அறிவு சார் சொத்துரிமைச் சட்டங்கள். சில சட்டங்கள் அப்படி இருப்பதில்லைதான். எது எப்படியோ, இந்நடைமுறைகளை விமர்சிப்போர் அப்பதம் தங்களுக்கு பரிச்சயமான காரணத்தினால் அதனை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டுள்ளனர். அதைப் பிரயோகப் படுத்தும் காரணத்தினால் பிரச்சனையின் தன்மையை தவறாக புரிந்துக் கொள்ளச் செய்கிறார்கள். இதற்கு மாறாக "சட்டபூர்வமாக காலனியாதிக்கம்" போன்ற மெய்ப்பொருளையுணர்த்த வல்ல சரியானச் சொற்களை பயன்படுத்தலாம்.

சாதாரண மக்கள் மட்டும் இதனால் குழப்பத்திற்கு ஆளாகவில்லை. சட்டப் பேராசியர்களே "அறிவுசார் சொத்து" எனும் இப்பதத்தில் உள்ள மாயையால் கவரப்பட்டு சிந்தை சிதறடிக்கப் பட்டு நிற்கிறார்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த விஷயங்களோடு முரண்படுகிற பொதுவான அறிவிப்புகளை செய்கிறார்கள். உதாரணத்திற்கு பேராசிரியரொருவர் பின்வருமாறு எழுதினார்,

''அமேரிக்க ஐக்கிய மாகாணங்களின் அரசியலமைப்பினை வடிவமைத்தோர், தற்போது உலக அறிவுசார் சொத்துரிமை கழகத்தில் பணிபுரிகின்ற தங்களின் வழித்தோன்றல்களைப் போலல்லாது, அறிவுசார் சொத்து விஷயத்தில், போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கக் கூடியதான அணுகுமுறையைக் கொண்டிருந்தார்கள். உரிமைகள் அவசியமானதுதான் என்பதை அவர்கள் உணர்ந்திருந்த போதிலும் காங்கிரஸின் கைகளை கட்டிப்போட்டு அதன் அதிகாரங்களை பல வழிகளிலும் கட்டுப்படுத்தியிருந்தார்கள்.''

அமேரிக்க ஐக்கிய மாகாணங்களின் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு ஒன்று, பகுதி எட்டின் உட்பிரிவு எட்டினை மேற்குறிப்பிடப்பட்ட வாசகம் மேற்கோள் காட்டுகிறது. இந்த உட்பிரிவிற்கும் வர்த்தக முத்திரைச் சட்டத்திற்கும் தொடர்பே கிடையாது. "அறிவுசார் சொத்துரிமை" என்கிற பதம் இப்பேராசிரியரை மிகைப்படுத்தி கூறவைத்தது.

சொற்பமான சிந்தனைக்கும் "அறிவுசார் சொத்து" என்கிற இப்பதமானது மக்களை இட்டுச் செல்கிறது. பொதுவாக இருக்கக் கூடிய அற்பமான அம்சங்களுக்காக வெவ்வேறாக விளங்கக் கூடிய இச்சட்டங்களை ஒப்பு நோக்க வைக்கிறது. இச்சட்டங்கள் ஒவ்வொன்றும் பொது மக்களின் மீது விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகள், அதனால் ஏற்படக்கூடிய கூடிய விளைவுகள் போன்ற அடிப்படை விவரங்களை ஒதுக்கி வைத்துவிட்டு இவை ஏதோ செயற்கையான வசதிகளை சிலருக்கு வழங்குவதாகக் கருதச் செய்கிறது. இந்த சொற்பமான சிந்தனை இப்பிரச்சனைகளின்பால் பொருளாதார அணுகுமுறையினை ஊக்குவிக்கின்றது.

பரிசோதிக்கப் படாத அனுமானங்களில் சவாரி செய்தவாறெ இங்கேதான் பொருளாதாரம் எப்பொழுதும் போல தனது வேலையைக் காட்டத் துவங்குகிறது. சுதந்திரமும் வாழ்க்கை முறையும் முக்கியமன்று மாறாக எவ்வளவு உற்பத்தி என்பதே பிரதானம் போன்ற மதிப்பீடுகளால் எழுகின்ற அனுமானங்களுக்கு வழிவிடுகின்றது. இசைமீதான பதிப்புரிமை இசைக் கலைஞர்களை ஆதரிக்கவும், மருந்துகள் மீதான படைப்புரிமை உயிர் காக்கும் ஆராய்ச்சிகளுக்கு பயன்படுவதாகவும், ஏட்டளவில் கூறப்படுகின்ற தவறான ஊகங்களும் ஏற்படுகிறது.

இப்படி பலவகையான சட்டங்கள் எழுப்புகின்ற குறிப்பிட்ட பிரச்சனைகள் "அறிவுசார் சொத்து" என்பதன் பரந்த நோக்கில் காணாது போய்விடுகின்றன. இப் பிரச்சனைகள் அவற்றுக்குரிய சட்டங்களுக்கேயான குறிப்பிட்ட அம்சங்களால் எழுபவை. "அறிவு சார் சொத்து" என்கிற பதம், மக்கள் இவற்றை புறக்கணிக்க ஊக்குவிக்கின்றன. உதாரணத்திற்கு இசையை பகிர்ந்து கொள்வது தகுமா என்பது பதிப்புரிமை சட்டத்தில் வருகின்ற பிரச்சனை. படைப்புரிமைச் சட்டத்திற்கு இதில் எந்தவொரு இடமும் இல்லை. பணம் குறைந்த நாடுகள் உயிர் காக்கும் மருந்துகளை தயார் செய்து குறைந்த விலைக்கு உயிர் காக்கும் பொருட்டு விற்பனை செய்யலாமா என்பது படைப்புரிமைச் சட்டத்தில் வருகின்றது. பதிப்புரிமைச் சட்டத்திற்கு இதில் செய்வதற்கு ஒன்றுமில்லை.

இவ்விரண்டும் பொருளாதாரத்தோடு மாத்திரம் தொடர்புடையவை அல்ல. மேலும் இவற்றின் பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட கூறுகளும் வெவ்வேறானவை. மிகைப்படுத்தப்பட்ட குறுகிய பொருளாதாரக் கண்ணோட்டத்தில் இவற்றை பார்ப்பதென்பது வேறுபாடுகளைப் புறக்கணிப்பதாகும். இவ்விரண்டினையும் “அறிவு சார் சொத்து” எனும் ஒரே குட்டையில் போடுவதென்பது, இவற்றை தனித்தனியே தெளிவாகப் பார்க்கக் கூடிய திறனுக்கு முட்டுக்கட்டையாய் அமையும்.

ஆக, அறிவுசார் சொத்து என்ற பொருளைப் பற்றியக் கருத்துக்களும் அதை மிகைப் படுத்த மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் முட்டாள் தனமானவை. இவையனைத்தையும் ஒன்றெனக் கருத தாங்கள் முற்பட்டால் மிதமிஞ்சிய மிகைப்படுத்தப்பட்ட சிந்தனைகளிலிருந்தே தங்களின் கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கும். இது நிச்சயமாக நல்லதல்ல.

படைப்புரிமை, பதிப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை எழுப்பும் பிரச்சனைகளைப் பற்றி தெளிவாக சிந்திக்க தாங்கள் விரும்பினால் இவையனைத்தையும் ஒன்றாகக் கோர்க்கும் எண்ணத்தை மறந்துவிடுங்கள். இவற்றை வெவ்வேறானதாகக் கருதுங்கள். அடுத்த வழி "அறிவுசார் சொத்து" என்கிற பதம் வழங்க முற்படுகின்ற குறுகிய சொற்பமான அணுகுமுறைகளை புறக்கணியுங்கள். இவற்றை அதனதன் முழுமையானப் பொருளில் வெவ்வேறானதாகக் கருதுங்கள். அங்ஙனம் செய்தால் இவற்றைப் பற்றி தெளிவாகக் கருதும் வாய்ப்பினைப் பெறுவீர்கள்.

உலக அறிவுசார் சொத்து நிறுவனத்தில் மாற்றத்தினை கொண்டுவருவதென்றால், மற்றவைக்கு மத்தியில் அதன் பெயரையே மாற்றக் கோருவோமாக.

 [FSF logo] “Our mission is to preserve, protect and promote the freedom to use, study, copy, modify, and redistribute computer software, and to defend the rights of Free Software users.”

The Free Software Foundation is the principal organizational sponsor of the GNU Operating System. Support GNU and the FSF by buying manuals and gear, joining the FSF as an associate member, or making a donation, either directly to the FSF or via Flattr.

back to top

இப்பக்கத்தின் மொழிபெயர்ப்புகள்